search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கன்னியாகுமரி வெங்கடாஜலபதி"

    கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி 2-வது நாளாக யாகசாலை பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் ரூ.22½ கோடி செலவில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலில் வருகிற 27-ந் தேதி காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை யாகசாலை பூஜைகள் தொடங்கியது. 16 யாக குண்டங்கள் மூலம் இந்த பூஜைகள் நடந்து வருகிறது. திருப்பதி கோவில் தலைமை அர்ச்சகர் சேஷாத்திரி தலைமையில் பூஜைகள் நடத்தப்பட்டது.

    நேற்று 2-வது நாள் யாகசாலை பூஜைகள் நடந்தது. காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை பஞ்ச கவ்ய திவ்சமும், தொடர்ந்து பசுவும், கன்றும் யாகசாலைக்கு கொண்டு வரப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் அர்ச்சகர்கள் மூலஸ்தானத்துக்கு சென்று கருவறையில் தானியத்தில் வைக்கப்பட்டுள்ள வெங்கடாசலபதி சிலைக்கு பூஜைகள் நடத்தினர். பத்மாவதி தாயார், ஆண்டாள் அம்பாள், கருட பகவான் ஆகிய சிலைகளுக்கும் பூஜைகள் நடத்தப்பட்டது. மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஹோமம், பூர்ணாகுதியும் நடந்தது.

    மேலும், காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் திருப்பதி கோவில் தலைமை அர்ச்சகர் சேஷாத்திரி காப்பு அணிவித்தார். கன்னியாகுமரி திருப்பதி கோவில் உதவி செயல் அலுவலர் ரவி, விவேகானந்த கேந்திரா செயலாளர் அனுமந்தராவ், சென்னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான உள்ளூர் தகவல் மற்றும் ஆலோசனை மைய உறுப்பினர்கள் மோகன்ராவ், ரவிபாபு, சீனிவாசலு, ராமராவ், சுரேஷ்குமார், சலபதி, குமரி மாவட்ட வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா, லெவிஞ்சிபுரம் கேப் பொறியியல் கல்லூரி தலைவர் கிருஷ்ணபிள்ளை, திருப்பதி தேவஸ்தான துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் சவுடு உள்பட பலருக்கும் காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து ஹோமம் நடைபெற்றது.

    யாகசாலை பூஜையில் பங்கேற்ற தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக நாகர்கோவில் மண்டல பொது மேலாளர் திருவம்பலம் நிருபர்களிடம் கூறுகையில், கன்னியாகுமரி திருப்பதி கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி வருகிற 27-ந் தேதி அதிகாலை 5 மணி முதல் மாலை வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும், பக்தர்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு கூடுதல் பஸ்களும் இயக்கப்படும். நாகர்கோவில் வடசேரி, களியக்காவிளை, தக்கலை, வள்ளியூர் போன்ற இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்றார்.

    கும்பாபிஷேக விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்து நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கார், குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், நாகர்கோவில் உதவி கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர், கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் கோவிலை பார்வையிட்டனர். 
    கன்னியாகுமரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வெங்கடாசலபதி கோவிலில் வருகிற 27-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. யாகசாலை பூஜை இன்று தொடங்குகிறது.
    கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா கடற்கரை வளாகத்தில் 5½ ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.22½ கோடி செலவில் பிரமாண்டமான முறையில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கட்டப்பட்டுள்ளது. இங்கு திருப்பதி ஏழுமலையான் சன்னதி, பத்மாவதி தாயார், ஆண்டாள் அம்மாள், கருடாழ்வார் சன்னதிகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், சீனிவாச திருக்கல்யாண மண்டபம், தியான மண்டபம், அன்னதானக்கூடம் உள்பட பல்வேறு மண்டபங்களும் கட்டப்பட்டுள்ளன.

    இந்த கோவிலை சுற்றி மாடவீதிகள், தோரண வாயில்கள், புல்வெளிகளும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதிதாக கட்டப்பட்ட வெங்கடாசலபதி கோவிலுக்கு வருகிற 27-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் யாகசாலை பூஜை தொடங்குகிறது.

    இதற்காக கோவிலில் 16 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று மாலை 6 மணிக்கு யாகசாலை பூஜையையொட்டி அங்குகுரார்ப்பணம், வேதாரம்பம் போன்றவை நடக்கிறது. நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை பஞ்சகவ்ய திவ்சமும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஹோமம், பூர்ணாகுதியும் நடைபெறுகிறது.

    24-ந் தேதி காலை 9 மணி முதல் 12 மணி வரை கேஸரா திவ்சமும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஹோமம், பூர்ணாகுதியும், 25-ந் தேதி காலை 9 மணி முதல் 12 மணி வரை ஜலாதி வாஸமும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஹோமம், பூர்ணாகுதியும் நடக்கிறது. 26-ந் தேதி காலை 9 மணி முதல் 12 மணி வரை கலசாஸ்னாப்னம், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மகாசாந்தி, திருமஞ்சனம் மற்றும் பூர்ணாகுதியும், தொடர்ந்து சாயனாதிவ்சமும் நடைபெறுகிறது.

    27-ந் தேதி காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 12.30 மணிக்கு மேல் பக்தர்கள் தர்ம தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். கும்பாபிஷேகத்தில் பங்கேற்கும் அனைத்து பக்தர்களுக்கும் பொங்கல், புளியோதரை, தயிர் சாதம் வழங்கப்படுகிறது. மேலும் பிரசாதமாக திருப்பதி கோவில் லட்டும் பக்தர்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. மாலையில் சீனிவாச கல்யாணம் நடத்தப்படுகிறது. கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே கோவிலில் நேற்று 40 அடி உயரத்தில் கொடிமரம் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. கொடிமர பிரதிஷ்டை காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் நடைபெற்றது. இதையொட்டி கொடி மரத்திற்கு பால், பன்னீர், இளநீர், தயிர், சந்தனம், குங்குமம், புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடந்தது. மேலும், கொடி மரத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை காட்டி, விசேஷ பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, கொடிமர பீடத்திற்கும் பூஜைகள் நடத்தப்பட்டு கொடிமர பிரதிஷ்டை நடந்தது.

    நிகழ்ச்சியில், சென்னை திருமலை திருப்பதி தேவஸ்தான உள்ளூர் ஆலோசனை மற்றும் தகவல் மைய உதவி செயல் அலுவலர் ரவி, சிறப்பு அதிகாரி முனிரத்தினம், ஆலோசனை மைய உறுப்பினர்கள் மோகன்ராவ், சந்திர சேகர், விவேகானந்தா கேந்திரா துணைத்தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் மற்றும் பொருளாளர் அனுமந்தராவ், திருமலை திருப்பதி தேவஸ்தான ஸ்தபதி முனுசாமி ரெட்டி, லெவிஞ்சிபுரம் கேப் பொறியியல் கல்லூரி தாளாளர் கிருஷ்ண பிள்ளை, திருமலை திருப்பதி தேவஸ்தான துணை செயற்பொறியாளர் சந்தரமவுலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    கன்னியாகுமரியில் கட்டப்பட்டுள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.
    இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் வெங்கடாசலபதி கோவிலை கட்ட திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது. அதன்படி, வட இந்தியா மற்றும் தென் இந்தியாவில் கோவில்களை கட்டி வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக நாட்டின் தென்கோடி கன்னியாகுமரியில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கட்டப்பட்டு உள்ளது. கோவிலுடன் மடப்பள்ளி, கல்யாண மண்டபம், அர்ச்சகர்கள் தங்கும் குடியிருப்பு, சகஸ்ர தீப அலங்கார மண்டபம் போன்றவை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் இந்த மாதம் நிறைவு பெற்று வருகிற 27-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.

    அதன்படி கும்பாபிஷேக விழா வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. 22-ந் தேதி நவதானியங்களை முளையிடுதல், மாலை 6 மணி முதல் 9 மணி வரை அங்குரார்ப்பணம், வேதாரம்பம் போன்றவை நடக்கிறது.

    23-ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை யாகசாலை வாஸ்து, பஞ்சகவ்ய பிரசன்னம், மாலை 6 மணி முதல் 8 மணி வரை அக்னி பிரதிஷ்டை, கும்ப ஆராதனை போன்றவையும், 24-ந் தேதி காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை ஹோமம், பூர்ணாகுதி, மாலை 6 மணி முதல் 8 மணி வரை ஹோமம் ஆகியவையும் நடைபெறும்.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் ஹோமம், ஜலாதிவாசம், திருமஞ்சனம் போன்றவை நடைபெறும்.

    27-ந் தேதி காலை 4 மணி முதல் 7 மணி வரை சுப்ரபாதம், கும்பஆராதனை, நிவேதனம் ஹோமம், காலை 7 மணி முதல் 7.30 மணி வரை கும்பம் உற்சவமூர்த்திகள் வீதி உலா, 7.30 மணி முதல் 9 மணிக்குள் கும்பாபிஷேகம் ஆகியவை நடக்கிறது.

    மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை நித்திய கைகர்யம், இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை சர்வ தரிசனம், இரவு 8.45 மணிக்கு ஏகாந்த சேவை போன்றவை நடைபெறும்.

    கும்பாபிஷேகத்தன்று பகல் 12.30 மணி முதல் பக்தர்கள் இலவச தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தில் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொள்ள உள்ளதால் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
    கன்னியாகுமரி மாவட்டத்தில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கட்டப்பட்டுள்ள வெங்கடாஜலபதி கோவிலுக்கு வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கும்பாபிஷேகம் நடத்த தேவஸ்தானம் முடிவுசெய்துள்ளது.
    கன்னியாகுமரி மாவட்டத்தில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வெங்கடாஜலபதி கோவில் கட்டும் பணி நடந்து முடிந்துள்ளது. இந்த கோவிலுக்கு வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கும்பாபிஷேகம் நடத்த தேவஸ்தானம் முடிவுசெய்துள்ளது. அதன்படி வருகிற 23-ந் தேதியில் இருந்து 27-ந் தேதி வரை யாகசாலை பூஜை, பஞ்சகவ்யம், ரட்சாபந்தனம், அக்னிபிரதிஷ்டை, கும்ப பாராயணம், பூர்ணாஹூதி உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

    22-ந் தேதி அங்குரார்ப்பணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 27-ந் தேதி காலை 4 மணிமுதல் 7 மணிவரை சுப்ரபாதம் நடக்கிறது. பின்னர் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து கோவிலின் நான்கு மாட வீதிகளில் உற்சவ மூர்த்திகள் வீதி உலா வருகின்றனர்.

    இந்த தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
    திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கன்னியாகுமரியில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் நிறைவடைந்ததையடுத்து அடுத்த மாதம் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று தெரிகிறது.
    திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கன்னியாகுமரி விவேகானந்தபுரம் விவேகானந்த கேந்திர வளாகத்தில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டுள்ளது. 5½ ஏக்கர் பரப்பில் ரூ.22 கோடியே 50 லட்சம் செலவில் பிரம்மாண்டமாக இந்த கோவில் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் கட்டுமான பணிகள் முழுவதும் நிறைவடைந்துள்ளது.

    தொடர்ந்து திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சங்கால் தலைமையிலான குழுவினர் இந்த கோவிலை ஆய்வு செய்தனர். பின்னர் அடுத்த மாதம் (ஜனவரி) கும்பாபிஷேகம் நடைபெறும் என்றும் கூறினர். தொடர்ந்து கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் அமைக்க கொடிமரம், சாமி சிலைகள் தயாராகவே உள்ளது. மேலும், திருப்பதி கோவிலில் உள்ளது போலவே இங்கு தேரோடும் 4 மாட வீதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்தநிலையில் கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு தனி அதிகாரியாக சென்னையில் உள்ள திருப்பதி திருமலை தேவஸ்தான உள்ளூர் தகவல் மற்றும் ஆலோசனை மைய உதவி செயல் அலுவலர் ரவி நியமிக்கப்பட்டு உள்ளார். மேலும், கோவிலுக்கு முதல் கட்டமாக 8 அர்ச்சகர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் நியமித்து உள்ளது.
    கன்னியாகுமரியில் கட்டப்பட்ட திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 27-ந்தேதி நடக்கிறது என்று திருமலை- திருப்பதி தேவஸ்தான அதிகாரி அனில்குமார் சின்கால் கூறினார்.
    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர வளாகத்தில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக 5½ ஏக்கர் நிலத்தை விவேகானந்த கேந்திரம் நன்கொடையாக வழங்கியது.

    அதைத்தொடர்ந்து 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்ட பூமிபூஜை நடந்தது. 5 ஆண்டுகளாக நடந்த கோவில் கட்டுமானப்பணி முடிவடைந்துள்ளது.

    அதைத்தொடர்ந்து திருமலை-திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சின்கால் நேற்று காலை கன்னியாகுமரி வந்து கோவில் பணிகளை ஆய்வு செய்தார்.

    பின்னர், அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

    கன்னியாகுமரியில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டிடப்பணி முழுமை அடைந்துள்ளது. இங்கு பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது. இந்த கோவிலுக்கு சின்னமுட்டத்தில் இருந்து இணைப்பு சாலையும், 4 மாட வீதிகளும், தோரண வாயில்களும் அமைக்கப்பட்டு உள்ளது. அடுத்த மாதம்(டிசம்பர்) 31-ந் தேதிக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்படும். கோவில் வளாகத்தை அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

    இந்த கோவிலின் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி மாதம் 27-ந்தேதி நடத்த திட்டமிட்டு உள்ளோம். அதற்கு முன்னதாக 4 நாட்கள் யாகசாலை பூஜைகள் நடைபெறும், கும்பாபிஷேகத்தின்போது, சாமிசிலைகள், கொடிமரம் பிரதிஷ்டை நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது, அவருடன் திருமலை-திருப்பதி தேவஸ்தான தலைமை பொறியாளர் சந்திரசேகர ரெட்டி, நிதி மற்றும் கணக்கு ஆலோசகர் பாலாஜி, செயற்பொறியாளர் சத்திய நாராயணன், உதவி செயற்பொறியாளர் சந்திரமவுலி ரெட்டி, மின்பிரிவு கோட்ட பொறியாளர் ரவிசங்கர் ரெட்டி, உதவி பொறியாளர்கள் பார்த்தசாரதி, அமர்நாத் ரெட்டி, திட்ட பொறியாளர் அப்சாராவ், ஒப்பந்ததாரர் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    முன்னதாக கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர செயலாளர் மற்றும் பொருளாளர் அனுமந்தராவுடன் அனில்குமார் சின்கால் கோவில் கும்பாபிஷேகம் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். 
    கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவிலில் நிறுவுவதற்கான சாமி சிலைகள் வந்தன.
    திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கடந்த 2010-ம் ஆண்டு கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் சீனிவாச திருக்கல்யாணம் நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் ரூ.24 கோடி செலவில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்ட திருமலை திருப்பதி தேவஸ்தான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக விவேகானந்த கேந்திரம் 5½ ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கியது. இதைத் தொடர்ந்து அந்த இடத்தில் கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் 13-ந் தேதி திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டுவதற்கான பூமிபூஜை நடந்தது. அதன்பிறகு கோவில் கட்டுமானபணி தொடங்கியது. இந்த கோவில் 2 தளமாக கட்டப்பட்டு உள்ளது. கீழ்தளத்தில் சீனிவாச கல்யாண அரங்கம், தியான அரங்கம், அலுவலகம் போன்றவைகளும் மேல்தளத்தில் ஏழுமலையான் வெங்கடாஜலபதி சன்னதி, பத்மாவதி சன்னதி, ஆண்டாள் சன்னதி, கருடபகவான் சன்னதிகளும் சுவாமிக்கு பிரசாதம் தயாரிப்பதற்கான மடப்பள்ளியும் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன.

    இந்த கோவிலின் மூலஸ்தானத்தில் நிறுவப்பட உள்ள ஏழுமலையான் வெங்கடாஜலபதி சிலை 7½ அடி உயரத்திலும் பத்மாவதிதாயார், ஆண்டாள் ஆகியோருக்கு 3 அடி உயரத்திலும், 2 துவாரக பாலர் சிலைகள் தலா 6½ அடி, கருடபகவானுக்கு 3¼ அடி உயர சிலைகள் வடிவமைக்கும் பணி திருப்பதியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான சிற்ப கலை கல்லூரியில் நடைபெற்றது. இந்த கோவில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி மாதம் நடைபெற உள்ளது.

    இதைத் தொடர்ந்து கோவிலில் தேக்கு மரத்தாலான 40 அடி உயர புதிய கொடிமரம் தூத்துக்குடியில் இருந்து கன்டெய்னர் லாரி மூலம் விவேகானந்த கேந்திராவுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த கொடிமரம் விரைவில் வடிவமைக்கப்பட்டு கோவில் மேல் தளத்தில் நிறுவப்படும் என்று தெரிகிறது.

    இந்த நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான சிற்ப கலைக் கல்லூரி யில் வடிவமைக்கப்பட்ட அனைத்து சிலைகளும் திருப்பதியில் இருந்து கன்டெய்னர் லாரி மூலம் கன்னியாகுமரிக்கு நேற்று அதிகாலை கொண்டுவரப்பட்டது. இந்த சிலைகள் அனைத்தும் ராட்சத கிரேன் மூலம் லாரியில் இருந்து இறக்கப்பட்டு கோவில் மூலஸ்தான கருவறையில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலைகளை ஏராளமான பக்தர்களும் சுற்றுலாபயணிகளும் வந்து பார்த்து செல்கிறார்கள். 
    ×